தங்களது போராட்டங்களை திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆளுங்கட்சியானதும் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
எனவே, திமுக அரசை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையிலும், கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே, திமுக அரசின் இந்த செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை (மார்ச் 23) ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.