லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பை கண்டித்து, சென்னையில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 27ம் தேதி தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.
வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.