ஓபிஎஸ் தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ் தனக்குச் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ள மௌன யுத்தத்தைத் தொடங்கியவர் தற்போது விலை பேசும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய செல்வாக்கைக் காட்டிக்கொள்ளும் முயற்சி அவருக்கு பின்னடைவுதான் தரும். ஓபிஎஸ்-ம் அவரது புதல்வர்களும், தொண்டர்களின் ஆதரவைப் பெறப் பதவி, பணம் என்று விலை பேசி வருகின்றனர்.
தொலைத்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற முயற்சி செய்யத் தொண்டர்களைத் தவறாக எடை போட்டு விடாதீர்கள். நீங்கள் விடும் அழைப்பு ஒவ்வொன்றும் உங்களுக்கு பின்னடைவு தந்து கொண்டிருக்கும். நீங்கள் விலை பேசும் வியாபார தந்திரத்தைக் கவலையும், வேதனை அளிப்பதாகத் தொண்டர்கள் பேசுகிறார்கள். தொண்டர்களின் ஆதரவைப் பெற, தன் சுயநலத்தால் ஆசைவார்த்தை கூறி பேரம் பேசுவது உங்களுக்குத் தரம் தாழ்ந்த செயலாகும், சுயநலத்தால் எதிலும் வெற்றி பெற முடியாது. இபிஎஸ்-க்கு, மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 93,802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், நீங்கள் தொண்டர்கள், மக்கள் நம்பிக்கை பெறாததால் 11,201 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள். நீங்கள் செய்யும் நடவடிக்கையால் வரலாறு உங்களை மன்னிக்காது”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.