பிரதமர் மோடி சென்னை வந்தால், அவரை நேரில் சந்தித்துப் பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகக் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, கட்சியில் அதிரடி நியமனங்களையும், நீக்கங்களையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். மொத்தம் 18 பேரை எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியிலிருந்து நீக்கியிருந்தார்.
இந்த அறிவிப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா, எஸ்.டி.கே ஜக்கையன், ஆர்.பி.உதயகுமார், ஆதிராஜாராம், திநகர் பி.சத்தியா, எம்.கே.அசோக், வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம், ஆர்.இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா ஆகிய 22 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோடி சென்னை வந்தால், அவரை சந்திக்க அனுமதி வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அனுமதி கோரியுள்ளதாகச் கூறப்படுகிறது. கடந்த முறை ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றபோது பிரதமரைச் சந்திக்க இயலாத சூழலில், பிரதமர் சென்னை வந்தால் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது, அதிமுகவில் நிலவும் பிரச்சனைகள் குறித்துப் பேச இருப்பதாகச் சொல்லப்படுகிறது.