தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, திருவள்ளூர், கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
நாளை (திங்கட் கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவள்ளூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை மறுதினம் (செவ்வாய் கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மழையை பொறுத்து விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.