நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் ஸ்வாதி ரயிலுக்காக காத்திருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் ஸ்வாதியை அரிவளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடினான். இந்த வழக்கில் கொலையாளியை பல நாட்கள் தேடி வந்த நிலையில் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ராம்குமார்தான் ஸ்வாதியை கொலை செய்தார் என போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாகவும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதால்அவரால் பேச முடியாது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பலத்த பாதுகாப்பு மத்தியில் இருந்தபோது ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ராம்குமார் உயிரிழப்பில் சந்தேகம் என கூறிய பெற்றோர்கள் மனித உரிமைஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தனர். ஸ்வாதி கொலை வழக்கில் எங்கள் மகனுக்கு தொடர்பு இல்லை. வேண்டும் என்றே இந்த வழக்கில் சிக்க வைத்து கொலை செய்து விட்டனர். இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும் சிறையில் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புஇல்லை. உண்மை என்ன என கண்டறிய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் கொலையா ? தற்கொலையா ஈ என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிறையில் ராம்குமார் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகள் பணியமர்த்த மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் ஸ்வாதியின் பெற்றோர் ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் தான் தன் மகளை இழந்தோம் என கூறி உயர்நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வழக்கில் இழப்பீடு அளிக்க முடியாது, ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளது என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.