யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு 3-வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும், காயமடைந்த வாசனுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், டிடிஎஃப் வாசனால் 45 லட்சம் சிறார்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். யூடியூப் சேனலில் வாசனைப் பார்க்கும் சிறார்கள் அதிவேகத்தில் பைக் ஓட்டுகிறார்கள். இதனால் விபத்துகள் நேரிடுகின்றன என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விசாரணையில், மூன்றாவது முறையாக 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.