தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி தரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்துக் கட்சி, சாதி, மத அமைப்புகளின் நிரந்தர கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால், அதிகாரிகள் நோட்டீஸ் அளித்து 2 வார கால அவகாசம் வழங்கி அகற்ற வேண்டும்.
மேலும் கொடிக் கம்பங்களை அகற்றும் செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடிக் கம்பம் வைத்துக் கொள்ளலாம். கட்சிக் கொடி கம்பங்கள் நடுவதால், மோதல்கள் உருவாகி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், கொடிக் கம்பங்கள் அகற்றுவதை தலைமைச் செயலாளர் கண்காணிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.