தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..
தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் ” நெல்லை, தென்காசி மாவடங்களில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறது.. இதனை தடுக்க கோரி, கடந்த 2018-ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.. அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் தரப்பில், இதற்கென தனி மருத்துவ மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு, மருத்துவக்கழிவுகள் நெல்லை மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.. ஆனால் கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கூறியிருந்தார்..
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, தமிழக மருத்துவத்துறை தரப்பில், மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்படுகிறது.. கேரள எல்லையோர மாவட்டங்களில் உள்ள வழித்தடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது..” என்று தெரிவிக்கப்பட்டது.. இதனை தொடர்ந்து நீதிபதிகள், தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக்கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்..