மணிப்பூரில் பழங்குடியின மக்களும், மெய்தி என்ற சமூக மக்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மெய்தி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியினர் என்று சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்குப் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மெய்தி சமூகத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் சுராசந்த்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒற்றுமைப் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியின் போது திடீரென வன்முறை வெடித்தது. ஏராளமான வாகனங்கள், வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டன. இதனால், அந்த மாநிலத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு 7,500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூரில் உள்ள நிலை குறித்துக் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, போதுமான ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கலவரம் நீடித்து வருவதால் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.