நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கும் நிகழ்வில் இந்தியா வரலாற்று சாதனையை அடைந்தபோது 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யூடியூப்பில் நேரலை ஸ்ட்ரீமில் பார்த்துள்ளனர். இதன் மூலம் புதிய சாதனையை யூடியூப் படைத்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை தொடங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில் வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறகிய உலகின் முதல் நாடாகவும் , நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமைகளை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியா இந்த வரலாற்று சாதனையை அடைந்தபோது 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யூடியூப்பில் நேரலை ஸ்ட்ரீமில் பார்த்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் யூடியூபின் லைவ் ஸ்ட்ரீமில் நேரடி பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக FIFA உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் 2022 இல் நடந்த பிரேசில் vs குரோஷியா போட்டியின் போது 6.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற யூடியூபர் காசிமிரோ முந்தைய சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.