இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், உயிரிழந்தோர்களின் உடல்களை வைக்க இடமில்லாமல் ஐஸ்கிரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால், ஐநா சபை 1947இல் பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கினர்.
இந்நிலையில், அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் போர் புரிய போவதாக அறிவித்து காசா மீது வான் வழித்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க இடமில்லாமல் காசா திணறி வருகிறது.
காசாவில் உள்ள பல்வேறு ஊர்களிலும் மருத்துவமனையின் பிணவறைகள் நிரம்பி வழிகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கல்லறைகளில் அடக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அதிகரிக்கும் சடலங்களை வைக்க இடம் இல்லாததால் ஐஸ்கிரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் குடியிருப்புகள் மேல் குண்டு மழை பொழிந்து வருகிறது இஸ்ரேல். கடந்த வியாழன் ஒரு நாளில் மட்டும் சுமார் 6,000 முறைகள் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது பறந்து குண்டுகளை வீசியதாக இஸ்ரால் ராணுவம் பெருமையுடன் தெரிவித்தது. இதற்கிடையே, காசா மக்களின் அடிப்படைத் தேவைக்கான குடிநீர் வரத்தை இஸ்ரேல் துண்டித்ததோடு, மருத்துவம், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.