நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உண்மையில் ப.சிதம்பரம், ராகுல் காந்திக்குத்தான் வேலையில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். சோமனூர் பகுதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உண்மையில் ப.சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோருக்குத்தான் வேலையில்லை” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து, காங்கேயம்பாளையம், காடம்பாடி, சாமளாபுரம், சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று, பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும். அப்போது, கோவை தொகுதியை முன்னேற்ற உறுதியான எம்.பி. தேவை. கோவையில் எதிர்க்கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், கோயம்புத்தூருக்குத் தேவையான நலத் திட்டங்களை கேட்டுப் பெறவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் எம்.பி. கோவையின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார். வளர்ச்சியை மீட்டெடுப்பது நமது கடமை. உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கும் 2 நவோதயா பள்ளிகள் கோவையில் அமைக்கப்படும். இந்த பள்ளிகளில் ஒரு குழந்தைக்கான கல்விச் செலவு ரூ.88 ஆயிரத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். கோவையில் அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக இருக்கும் காங்கேயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். சூலூர் விமானப் படை தளத்துக்கு இடம் கொடுத்த குடும்பங்களுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Read More : ’பிரதமர் மோடியால் தமிழகத்தில் கால் செருப்பை கூட தொட்டு பார்க்க முடியாது’..!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!