பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களில் முதன்முறையாக பத்திரிகையாளர்கள் இருவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 132 பேருக்கு இம்முறை பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மும்பை சமாச்சார்” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஹோர்முஸ்ஜி நஸர்வான்சி காமா என்பவரும், ‛‛ஜென்மபூமி’ பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் குந்தன் வியாஸ் ஆகிய இருவரும் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவையாற்றியமைக்காக விருதினை பெறுகின்றனர். இவர்கள் இருவரும் ஐ.என்.எஸ். எனப்படும் இந்திய பத்திரிக்கைகள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தனர். இதன் மூலம் முதன்முறையாக ஒரே ஆண்டில் இரு ஊடக உரிமையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.