ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடைசுற்றுலா தொடங்கியுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை தீவிரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்துக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளிடம் இருந்து சுற்றுலா பயணிகளை மீட்க பஹல்காமை சேர்ந்த சையது உசேன் என்ற குதிரை ஓட்டி முயன்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் துடித்தபோது, குதிரை ஓட்டி சையது உசேன் பயங்கரவாதிகளில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். கடைசி வரை போராட்டிய சையது உசேன் கடைசியில் உயிரிழந்தார். அவரது தந்தை சையத் ஹைதர் ஷா ANI இடம் கூறுகையில், “எனது மகன் நேற்று வேலைக்காக பஹல்காமுக்கு சென்றிருந்தான்.
பிற்பகல் 3 மணியளவில் தாக்குதல் குறித்து தகவல் வந்தது. உடனே அவனை அழைத்தோம்… ஆனால் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. பிறகு மாலை 4.40 மணிக்கு அவனது போன் இயங்கத் தொடங்கியது. ஆனால் எத்தனை முறை அழைத்தாலும், யாரும் பதிலளிக்கவில்லை. நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம், அப்போதுதான் தாக்குதலில் அவன் சுடப்பட்டதை அறிந்தோம். பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
Read more: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவுகளை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்..!!