பாகிஸ்தானின் பிரபல பின்னணி பாடகர், ரஹத் ஃபதே அலி கான் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இந்தி படங்கள் மற்றும் பாகிஸ்தானி படங்களில் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். இவர் அதிக சம்பளம் வாங்கும் பின்னணிப் பாடகர் ஆவார். தற்போது தனது பணியாளை செருப்பைக் கொண்டு அவர் அடிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு பாட்டிலை கேட்டு தனது வீட்டின் பணியாளரை மூர்க்கமாக தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த நபர் கெஞ்சிய போதிலும், இரக்கம் காட்டாமல் தலையிலும், உடலிலும் தாக்கியுள்ளார். இதனை கண்ட பலரும் இந்த வீடியோவை தங்களது X தளங்களில் பகிர்ந்து பாடகருக்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.
மக்கள் கண்டனம் தெரிவிக்க தொடங்கியவுடன் மீண்டும் ஒரு வீடியோவை ரஹத் வெளியிட்டுள்ளார். அதில் அடி வாங்கியவர் தனது மாணவன் என்றும் புனித நீர் இருக்கும் பாட்டிலை அவர் தொலைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தந்தையைப் போன்ற ஒருவர் தனது மாணவனை மகனைப் போல கருதி கண்டிப்பதில் தவறில்லை என்றும் கூறியுள்ளார். தனது புகழை குலைக்கவே அந்த வீடியோவை சிலர் பகிர்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிறைய முறை அந்த மாணவன் செய்யும் தவறுகளுக்கு தான் கண்டித்து இருப்பதாகவும், இந்த முறை அடித்ததற்காக மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அந்த மாணவனின் தந்தை ரஹத் அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரும் ரஹத் தனது மகனை கண்டித்ததில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.