தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக ராமநாதபுரத்தில் உச்சிப்புளி, திருவாடானை, பரமக்குடி, பாம்பன் மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இத்துடன் மீன் இனப்பெருக்க காலமும் நிலவி வந்ததால், ஏப் 15ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி ‘மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் நேற்று வழக்கம்போல சில மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஒன்றாம் நிலை ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பாம்பன் தென்கடல் பகுதியில் சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி உள்ளதால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால் படகுகளை கரையோரங்களில் நிறுத்துவதற்கு ஒரு வித தயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.