விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர இருக்கிறது.
நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு சார்பில் பதிவு எண் வழங்கப்படுகிறது. இந்த எண்களை கொண்டுதான் வாகனங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. இதனால், வாகனத்தின் உரிமையாளர் யார்?, எந்த ஊர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்யப்பட்டது? எந்த ஆண்டு வாகனம் வாங்கப்பட்டது?, என்ஜின் எண், வாகனத்தின் கலர் என்று வாகனத்தை பற்றிய வரலாறு தெரிந்து கொள்ளலாம். குற்றச் சம்பவம் நடக்கும் போதும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க இந்த வாகன பதிவு எண் தான் உதவியாக இருக்கிறது.

வாகனத்தின் முன்பும், பின்பும் நம்பர் பிளேட்டில் இந்த பதிவு எண் எழுதப்பட்டு இருக்கும். வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகங்கள் இந்த பதிவு எண்ணை வழங்குகிறார்கள். பதிவு எண்ணின் முதல் 2 எழுத்துக்கள் அந்தந்த மாநிலத்தை குறிக்கும். தமிழகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு TN என்றும், கேரளாவிற்கு KL என்றும் குறிப்பிடப்படும். இதற்கு அடுத்துள்ள எண்கள் ஆர்டிஓ-வின் அலுவலக எண்களை குறிக்கும். இதன் பிறகு உள்ள எண்கள் தான் உங்களின் வாகனத்திற்கான அடையாளமாக இருக்கும்.

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சமீப காலமாக வாகனங்களுக்கு பேன்சி எண் வாங்குவது அதிகரித்துள்ளது. சினிமா நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் நியூமராலஜிபடி பேன்சி எண்களை வாங்குகின்றனர். இதற்கு தனியாக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் செலுத்தி பேன்சி நம்பரை பெறுகிறார்கள். இதற்காக தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான வாகன எண்களை சிறப்பு பேன்சி எண்களாக ஒதுக்கி உள்ளது. இந்த பேன்சி எண்களை ஆர்.டி.ஓ.க்கள் மூலம் பெற முடியாது. கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், டி.என். மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி பேன்சி எண் கட்டணத்தை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இந்த கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளது. விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த புதிய கட்டண உயர்வின்படி, முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புகிறவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி வந்தவர்கள் இனி ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டிய இருக்கும். 5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கான கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது. 11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்கிறது.