தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, கால் வலி, கை வலி என்று எந்த வலி வந்தாலும் முதலில் நாம் தேடுவது பாராசிட்டமால் மாத்திரையை தான். மருத்துவர் பரிந்துரை இல்லாமலே பாராசிட்டமாலை சுலபமாக வாங்க முடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாராசிட்டமால் மாத்திரையை சர்வ சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். கொரோனா காலத்தில் பாராசிட்டமாலின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கீழே விழுந்து அடிபட்ட காயத்துக்குக்கூட மருத்துவர்களால் பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. அத்தனை சிறப்பு வாய்ந்த பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்வதற்கும் ஒரு அளவு உண்டு.
ஆம், பாராசிட்டமால் நீண்ட காலமாக எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும். இந்த மாத்திரை வலிக்கான காரணத்தைக் குணப்படுத்தாது, ஆனால் வலியைக் குறைக்கும். எந்த வலி வந்தாலும், பாராசிட்டமாலை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், மாத்திரை சாப்பிட்ட 5-6 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வலி வந்துவிடும். வலி திரும்பியவுடன், நாம் மீண்டும் பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிடுகிறோம்.
பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால், பல பக்க விளைவுகள் ஏற்படும். பொதுவாக, பாராசிட்டமா- சாப்பிடுவதால் தூக்கம், சோர்வு, சொறி, அரிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.. ஆனால், அதுவே நீண்ட காலமாக பாராசிட்டமாலை உட்கொண்டால் சோர்வு, மூச்சுத்திணறல், இரத்த சோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். பாராசிட்டமால் உட்கொள்வதற்கு ஓர் அளவு இருக்கிறது. மருத்துவர்கள் உடலை ஆராய்ந்து எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுவர். அதன் படி தான் நாம் பாராசிட்டமாலை எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை.