தற்போதைய காலகட்டத்தில் நேற்று பிறந்த குழந்தை கூட கைப்பேசியில் மூழ்கி போயிருக்கிறது, அந்த அளவிற்கு உலகம் மாறிவிட்டது. தற்போது கைபேசி இல்லாத குழந்தைகளையே நாம் பார்க்க முடியாது.ஆனால் இந்த செல்போன் பயன்பாடு என்பது குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்க செய்யும் ஒரு சாதனமாக இருந்து வருகிறது. ஆகவே பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடக்கத்திலேயே கவனமாக இல்லாவிட்டால் பின்பு பல விபரீத நிலைகளை சந்திக்க நேரலாம்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற காளிங்கராயன் பாளையம் பகுதியில் உள்ள பாரதி நகரில் லாரி ஓட்டுனரான ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் ஆர்த்தி என்ற 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் தான், அதிக அளவில் செல்போன் பயன்படுத்திய தன்னுடைய மகளை பெற்றோர் கண்டித்துள்ளனர். அதோடு, அவரிடம் இருந்த செல்போனை பறித்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஆர்த்தி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், ஆர்த்தியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஆர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.