2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முடிவான நிலையில் அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தீவிரமாக கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது .
2019 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் ஆன உறவை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. மேலும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதம் தலைமையுடன் ஆலோசனை செய்வதற்காக அண்ணாமலை டெல்லி சென்று இருக்கிறார்.
கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் பரபரப்பான சூழ்நிலையை எட்டி இருக்கும் நிலையில் வர இருக்கின்ற தேர்தலில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்திருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு சீட் வழங்கப்பட்டிருந்தது. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் 2 முதல் 3 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.