5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க போவதாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மக்களவை தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் – ஆத்மி கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி முகுல் வாஸ்னிக், ”மக்களவை தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடரும். நாங்கள் மீண்டும் சந்திப்போம். பிறகுதான் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம். பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், “5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், ”இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சமீபத்தில் தொடங்கியுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு எடுத்துள்ளோம்.
மேலும் டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் பிரிவுகள் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிடும். அடுத்த கூட்டத்தில், தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.