நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா? அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கப்போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக, அதாவது ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
அதே முறையில் 2024ஆம் ஆண்டு தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக மாநில தேர்தல் அதிகாரிகள் விரைவாக இறுதி வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை பேசுவதற்கும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுவதற்கும் குழுக்களை நியமித்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன.
விரைவில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளை ஈடுபட உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 16 என்ற தகவல் வெளியான நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.