பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் பரபரப்புக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறார். மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் சிதம்பரம் போன்றவர்களைத் தொடர்ந்து, ஐந்தாவது முறையாக தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் 6-வது நிதி அமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் உரையில் “இந்த பட்ஜெட் பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் மாற்று தொழில்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும், உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்திய ஜொலிக்கிறது. கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு. “நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்”. 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது. உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. 2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது.
தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு. 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. “9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் என்று உரையாற்றினார் நிர்மலா சீதாராமன்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும். அதன்படி 2200 கோடி ரூபாய் முதலீட்டில் விவசாயத்துறையில் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு. நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும். 20லட்சம் கோடி விவசாயக் கடன் அளிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது. குழந்தைகள் சிறார்கள் இளையோர் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்படும்.
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு வேளாண் துறை மூலம் ரூ.20லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு. உணவு தானிய விநியோகத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்ளை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் ஸ்டார்ட் நிறுவனங்களை தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும். ICMR நிறுவனங்கள் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் ரூ.15000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுக்கான வட்டி இல்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும் இதற்காக ரூபாய் 1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு. ரயில்வே துறையில் புதிய பாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூபாய் 2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு. அடுத்த மூன்றாண்டுகளில் ஏகலைவா மாதிரி பள்ளிகளில் 3800 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் ஏகலைவா மாதிரி பள்ளிகள் மூலம் 3.5லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி அளிக்க திட்டம். மேலும் ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.