யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ‘நான் முதல்வன்’ சிறப்பு திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 7ம் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023ம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையை பெறுவதற்கு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், http://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையை படித்து பார்த்து, 11ம் தேதி முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.