சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சூர்யா என்ற நபர் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் கல்லீரல் பிரச்சனையின் காரணமாக, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பாலாஜி என்ற நபர் தன்னுடைய கையில் போடப்பட்டிருந்த குளுக்கோஸ் ஊசியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து மருத்துவர் சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால் ஆத்திரம் கொண்ட நோயாளி பாலாஜி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவர் சூர்யா கழுத்தில் குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோயாளியாய் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து கொண்ட சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே திடீர் வேலை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் பேரணிராஜன் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்ததோடு, மருத்துவர் சூர்யா மீது தாக்குதல் நடத்திய உள் நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாக கூறியதை தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.