நாளை மறுநாள் பாட்னா நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக சமன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று அதை தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது இன்று வரை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அவரது அந்த கருத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பீகார் தலைநகர் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய வழக்கில் பிப்ரவரி 13ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடந்த மாநாட்டில் உதயநிதி, “சனாதனம் மலேரியா, டெங்கு போன்றது, எனவே அதை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக்கூடாது” என்றார்.
பாட்னா உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கௌசலேந்திர நாராயண், செப்டம்பர் 4-ம் தேதி உதயநிதிக்கு எதிராக நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 6-ம் தேதி சிறப்பு நீதிபதி வஹாலியாவுக்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பீகார் தலைநகர் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது மட்டுமின்றி அடுத்த மாதம் 13-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிப்பாராக இல்லையா..? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.