ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுப்பு. இதனால் ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பவன் கல்யாணை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மற்றும் கட்சியின் பிஏசி தலைவர் நாதெண்டலா மனோகர் ஆகியோர் நேற்று இரவு ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் படுத்து போராட்டம் நடத்தியபோது அவர்களை போலீசார் தடுப்பு காவலில் எடுத்துள்ளனர். ஆந்திராவிற்குள் நுழைய அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், ஜக்கையாபேட்டா அருகே மாநில எல்லையில் நள்ளிரவில் பவன் கல்யாண் போராட்டம் நடத்தினார். ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் சென்று கொண்டிருந்தார், அவருக்கு மாநிலத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், கரிகாபாடு சோதனைச் சாவடியில் ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தினார்.
பல கட்சி தொண்டர்கள் மாநில எல்லைகளில் திரண்டதால் தேசிய நெடுஞ்சாலையில் பதற்றம் நிலவியது. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பவன் கல்யாண் வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையடுத்து, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததைக் கருத்தில் கொண்டு, மாநில எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்திய என்டிஆர் மாவட்ட ஆணையரக போலீஸார், கான்வாய்வை தடுத்து நிறுத்தினர்.