Paytm பெயரில் போலியான ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி அதில் வாடிக்கையாளர் சேவையைத் தேடும் பயனர்களை குறிவைத்து பணம் பறிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் கொள்ளை கும்பல் இறங்கியுள்ளது.
இந்த நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு அது தொடர்பான குற்ற சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. சமூக வலைதளங்கள் (Social Media) மூலம் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சைபர் கிரைம் சம்பவங்கள் நடக்கின்றன.போலியான மொபைல் நம்பர்களை பயன்படுத்தி கால் (Call), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் இமெயில் (Email) மூலம், ஒருவரது அறியாமை மூலம் எளிதில் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சைபர் குற்றங்களை பற்றி அறிந்து கொண்டுள்ளனர். போலியான மொபைல் நம்பர்களில் இருந்து வரும் கால், எஸ்எம்எஸ், இமெயில்களை கண்டறிய தொடங்கிவிட்டனர்.
இதையறிந்த சைபர் கிரைம் கும்பல்கள், ஒரு புதுவிதமான மோசடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ட்விட்டர் மற்றும் பேடிஎம் (Paytm) நிறுவனங்களையே சுத்தலில் விட்டு பணமோசடியை அரங்கேற்றியிருக்கிறது. அதாவது, ஒருவர் பேடிஎம் மற்றும் ட்விட்டர் பயன்படுத்தும் நபராக இருந்தால், அவர் ட்விட்டரில் “Paytm” என்ற வார்த்தையை ட்வீட் (Tweet) செய்யும்பட்சத்தில் அவருக்கு பேடிஎம் பேங்க் கேர் (Paytm Bank Care) என்னும் ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து செய்தி அனுப்பப்படுகிறது. அதில், பேடிஎம்மில் உங்களுக்கு பணம் செலுத்துவது, பெறுவது உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று சில நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை நம்பி ஒருவர் கால் செய்துவிட்டால், அவரது பேடிஎம் தகவல்கள் திருடுபோக வாய்ப்புள்ளது. அதன்பின் அவரது பணமும் திருடுபோகலாம்.
இதுபோல பலர் ட்விட்டரில், பேடிஎம் என ட்வீட் செய்து, அதன் மூலம் போலி பேடிஎம் அக்கவுண்டில் இருந்து வந்த செய்தியை நம்பி, தங்களது லாகின் விவரங்கள் (Login details), பேங்கிங் தகவல்கள் (Banking information), பாஸ்வேர்ட்ஸ் (Passwords) மற்றும் யுபிஐ பின்ஸ் (UPI pins) ஆகியவற்றை பறிகொடுத்துள்ளனர். இதனால் பேடிஎம் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. பேடிஎம் தொடர்பான சந்தேகங்களுக்கு, பேடிஎம் ஆப் (Paytm App) மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். ட்விட்டரில் பேடிஎம் பேங்க் கேர் என்னும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து வரும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அதில், குறிப்பிட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்புகொண்டு எந்த தகவல்களையும் பகிர்ந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல ட்விட்டர் நிறுவனத்துக்கும், பேடிஎம் தரப்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அந்த போலியான பேடிஎம் ட்விட்டர் அக்கவுண்ட்டை நீக்குமாறு குறிப்பிட்டுள்ளது. பேடிஎம் மட்டுமல்ல, எந்த பேங்க் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தாலும், ட்விட்டரில் உங்களை தேடி வரும் செய்திகளையும், லிங்க்குகளையும் உடனே நம்பிவிடாதீர்கள். அதன் உண்மை தன்மையை முதலில் சரிபாருங்கள். பெரும்பாலான பண மோசடி கவனக்குறைவால் மட்டுமே நடக்கிறது. ஆகவே, கவனமுடன் இருங்கள். ட்விட்டரில் Paytm-ன் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைக் கணக்கு, ‘Paytm care’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.