ஏஐ கேமரா எனப்படும் செயற்கை நுண்ணறிவு பெற்ற கேமராக்களை சாலை போக்குவரத்தை பராமரிக்க பொருத்துவதா அல்லது வேண்டாமா என்கிற விவாதம் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க, மறுப்பக்கம் ஏஐ கேமராக்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொருத்தும் பணிகளும் நடக்கின்றன. ஏஐ கேமராக்கள் மூலம் சில சமயங்களில் ஆதாரமற்ற அபராதங்கள் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இந்த குற்றச்சாட்டுகள் கேரளா மாநிலத்தில்தான் அதிகளவில் எழுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த குற்றச்சாட்டுகள் வாயிலாக போலீஸாரும் ஊழல்களில் ஈடுப்படுவதாக கூறப்படுகிறது.
கேரள போலீஸார் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் களையெடுத்து வருவதாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கேரள மாநில மின்சார துறை (KSEB)-இன் அலுவலக ஜீப் வாகனத்திற்கு வயநாட்டில் கல்பெட்டா என்ற பகுதியில் உள்ள மோட்டார் வாகன துறை சார்பில் ரூ.20,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, ஜீப் வாகனத்தில் சட்டத்திற்கு விரோதமாக நீளமான ‘பிக்கர் போல்’ எடுத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மின்சார துறையினரின் வேலை, மின்சார கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகளை வெட்டுவதும், அவற்றை அங்கிருந்து அகற்றுவதும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இத்தகைய பணிகளுக்கு மரக்கிளைகளை வெட்டும் ‘பிக்கர் போல்’ கருவி அவசியமானது. இல்லையெனில் மின்சார ஊழியர்கள் நேரடியாக மரத்தின் கிளை மீது ஏறி வெட்ட வேண்டியிருக்கும்.
ஆனால் இதெல்லாம் ஏஐ கேமராவுக்கு தெரியாது அல்லவா. ஆட்டோமேட்டிக்காக ரூ.20,500-ஐ அபராதமாக மாநில மின்சார துறைக்கு விதித்துவிட்டது. ரூ.20,500இல் ரூ.20,000 ஜீப் வாகனத்தில் மரக்கிளையை வெட்டும் கருவியை எடுத்து சென்றதற்காகவும், ரூ.500 ஓட்டுனர் சீட்பெல்ட் அணியாமல் இருந்ததற்காகவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத நடவடிக்கை, மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இந்த இரு துறைகளுக்கு மத்தியில் மனகசப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போல், கல்பெட்டாவில் உள்ள மோட்டார் வாகன துறை அலுவலகத்திற்கான மின்சார விநியோகத்தை வயநாட்டில் உள்ள கேரள மின்சார துறையினர் அதிரடியாக பழி வாங்குவதுபோல் நிறுத்தியுள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கைக்கு, கல்பெட்டா மோட்டார் வாகன அலுவலத்திற்கு மின்சார கட்டண பாக்கி உள்ளதை காரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.