கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது..
பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை உள்ளது… தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, காடுகளை அழித்தது, நீர் நிலைகளை அழித்தது போன்றவற்றின் விளைவாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.. இதன் காரணமாக விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் முன்னெடுத்து வருகின்றன..
அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கும் சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் ( ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி) பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. தமிழக அரசும் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகிறது..
இந்நிலையில் சென்னை மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.. பிளாஸ்டிக் இல்லா கடற்கரையாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது.. இந்த 3 கடற்கரைகளிலும் காலை, மாலை என இருவேளை ஆய்வு செய்யப்படும் எனவும், கடற்கரைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது..