பெண் ஊழியர்கள் தங்களுக்கு பிறகு குடும்ப பென்ஷனை பெற தகுதியான நபர்களாக கணவருக்கு பதிலாக தனது மகனையோ, மகளையோ பரிந்துரை செய்யலாம் என ஓய்வூதிய விதிமுறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
மத்திய சிவில் சேவைகள் (பென்ஷன்) விதிகள் 2021ன் விதி 50ன்படி, அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் அவரது கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும். இறந்த ஊழியரின் கணவனோ, மனைவியோ இல்லாதபட்சத்தில் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியவற்றாக இருக்கும் போது மட்டுமே குடும்ப ஓய்வூதியம் குழந்தைகளுக்கு சேரும்.
இந்த விதிமுறையில் தற்போது பென்ஷன் மற்றும் பென்ஷன்தாரர்கள் நலத்துறை முக்கிய திருத்தம் செய்துள்ளது. அதன்படி, பெண் அரசு ஊழியர் ஒருவர், தனக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக தனது மகனையோ அல்லது மகளையோ பரிந்துரைக்கலாம் என மாற்றி உள்ளது. இது குறித்து நலத்துறை செயலாளர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘‘இந்த திருத்தம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும். கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடுத்திருந்தாலோ, அந்த வழக்கு விசாரணையில் இருந்தாலோ சம்மந்தப்பட்ட பெண் ஊழியர் தனது குடும்ப ஓய்வூதியத்தை கணவருக்கு பதிலாக குழந்தைகளுக்கு வழங்க முடியும். எனவே இந்த திருத்தம் முற்போக்கானது. பெண் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடியது’’ என்றார்.