வீட்டின் மின் இணைப்புகள் 3 ஃபேஸ் என்று சொல்லக்கூடிய மும்முனை இணைப்பாக இருப்பது நல்லது. ஏனென்றால், மின் உபகரணங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு மின்சாரத்தை இழுக்கும் எனத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி சமமாக, 3 ஃபேஸ்களிலும் பகிர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், மின்சாரம் திடீரென அதிகமாகப் பாயும் போதோ, ஷார்ட் சர்க்யூட் ஆகும்போதோ தானாகவே ட்ரிப் ஆகக்கூடிய கருவி இருப்பது அவசியம்.
முக்கியமாக, எர்த் கனெக்க்ஷன் கொடுத்திருக்க வேண்டும். இது, ஷாக் அடிப்பதில் இருந்து பாதுகாக்கும். ஸ்விட்சுகள், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இருப்பது மிக மிக முக்கியம். இந்நிலையில், மின் மோட்டார் சுவிட்சை போட முயன்ற கர்ப்பிணி பெண் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.கே.பி நகர் 16-வது தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி இந்துமதிக்கு 25 வயதாகும் நிலையில், 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தண்ணீர் இல்லாததால் மின் மோட்டாரை போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, மின் மோட்டாரின் சுவிட்சை இந்துமதி தொட்டபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் அவர் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இந்துமதியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.