புதுச்சேரியில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அதிகளவிலான மக்கள் வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பயின்று வந்த காயத்ரி (19) என்ற மாணவி காய்ச்சல் காரணமாக, மூலகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தருமபுரி மேட்டுத்தெருவைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மீனா ரோஷினி (28) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. டெங்குவால் இருவர் பலியாகியுள்ள நிலையில், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.