தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. தற்போது இந்த புயலானது மேலும் சென்னைக்கு தென்கிழக்கே 550 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. மேலும் 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 11 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது. மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த மாண்டஸ் புயல் புதுவை -ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திராவில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் நாளை வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடந்த பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் தீவிர புயலை (கஜ புயல், வர்தாபுயல்) போல் கிடையாது எனவும் தகவல்.