மழைக்காலங்களில் நோய்கள் எளிதாக பரவுவதால், அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்…
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்காலங்கள் வந்தாலே நோய் தொற்று பரவலும் அதிகரித்து விடும். அதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும், மழைக்கால நோய் தொற்று பரவலில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

குறிப்பாக, குழந்தைகள் இந்த நேரங்களில் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எப்படி நோய் தொற்று பரவியது என தெரியாமல் நாமும் உரிய சிகிச்சையை மேற்கொள்ள தவறிவிடுகிறோம். எனவே, இதனை தடுக்கவும், மழைக்கால நோய்களில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது குறித்தும் தற்போது பார்க்கலாம். மழை நேரங்களில் புளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு, எலி காய்ச்சல் உள்ளிட்டவை வேகமாக பரவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபுளூ காய்ச்சல் : ஒருத்தரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்
டெங்கு காய்ச்சல்: பகலில் கடிக்கும் கொசு மூலம் பரவும்
மலேரியா: இரவில் கடிக்கும் கொசு மூலம் பரவும்
டைபாய்டு: மாசடைந்த குடிநீர் அருந்துவதன் மூலம் பரவும்
எலி காய்ச்சல் ( Leptospirosis): எலியின் சிறுநீரில் இருந்து பரவும்
காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் ஆகியவை இரண்டு நாட்கள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மழைக்கால நோய்களை தடுக்க செய்ய வேண்டிவை, வீட்டை சுற்றி மழை நீர் தேங்குவதை தடுப்பதன் மூலம் கொசு உற்பத்தியை தவிர்க்கலாம். மேலும், கொசு கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்த பின் கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது. ஃபுளு மற்றும் டைபாய்டு வராமல் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஹோட்டல் உணவுகளை தவிர்த்து சத்தான பழங்கள், காய்கள் மற்றும் கீரைகள் எடுத்துக்கொள்வது நல்லது.