பெங்களூரு காமாக்ஷிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராஜேஸ்வரி. இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றுக் காலை குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து, குடும்பத்தார் நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், ராஜேஸ்வரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர்கள், குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ராஜேஸ்வரி மயங்கிய நிலையில், கிடந்துள்ளார்.
மேலும் உள்ளே, கியாஸ் சிலிண்டர் மூலம் பயன்படுத்தப்படும், ஹீட்டரில் இருந்து கியாஸ் லீக்கானது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஸ்வரியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், அவர் ஹீட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைட் காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.