அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து நன்கொடை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய மோசடிகள் அரங்கேறிவருகின்றன.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். தரிசனம் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலோனோர்கள் இந்த கோயில் திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் மோசடி ஆசாமிகள் சிலர் பணம் வசூல் செய்வதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அதன் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தனது எக்ஸ் பதிவில், ‘‘ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா பெயரில், ராமர் கோயில் அறக்கட்டளை என்று சொல்லி கொண்டு சிலர் பணம் வசூல் செய்து வருகின்றனர். மக்கள் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இது குறித்து உத்தர பிரதேச மாநில காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,’’ பதிவிட்டுள்ளார்.