ஆவின் பூத்களில் பால் வாங்கும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், “அணைக்கட்டு, ஊசூர், ஒடுக்கத்துார் உள்ளிட்ட இடங்களில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், பால் உற்பத்தியாளர்கள் 40 முதல் 50 கி.மீ. வரை பயணித்து வேலூருக்கு பாலை எடுத்துச் செல்கின்றனர். இதனால், பால் கெட்டு போகிறது. எனவே, அரசுக்கு பால் வழங்க முன்வரும் விவசாயிகளுக்காக, பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து தர வேண்டுமென கோரினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “ஒடுக்கத்தூர் கிராமத்தில் உள்ள 11 கிளை சங்கங்களில் இருந்து 3,990 லிட்டர் பால் வரை தான் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, அங்கு 5 ஆயிரம் லிட்டர் வரை பால் கிடைத்தால், குளிரூட்டும் மையம் அமைக்கலாம். மேலும், எம்.எல்.ஏ. தனது லெட்டர் பேடில் கோரிக்கையை எழுதிக் கொடுத்தால், குளிரூட்டும் நிலையம் அமைத்து தர உதவியாக இருப்பேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனியார் நிறுவனங்கள் ரூ.56-க்கு பால் விற்பனை செய்யும் நிலையில், நாம் ரூ.40-க்கு தான் விற்கிறோம். மேலும், பால் கொள்முதலுக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பால் வாங்குபவரும் ஏழை.. விற்பனை செய்பவரும் ஏழை.. எனவே, அவர்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஆவின் பூத்களில் பால் வாங்கும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்கு பெண்கள் பால் வாங்கச் சென்றால், ‘கல்ப்ரிட்ஸ்’ வருவதாகவும், அந்த நேரத்தில் முகம் தெரியாது என்றும் கூறியுள்ளார். இதனால், காலை 6.30 முதல் 7.30 மணி வரை பால் வழங்கி வருகிறோம். இப்போது, பெண்களுக்கு எந்த இடையூறும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.