தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும், நாளையும் வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடதமிழக – தென்ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.