தமிழ்நாட்டில் டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சல்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்களை கூறியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அம்மாநிலத்தில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது அதிகரித்துள்ளது. இதன் விளைவாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மட்டுமே இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”தமிழ்நாட்டில் பருவகால நோய்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள், மழைக்கால காய்ச்சல்கள் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மாத்திரைகளும் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டன. அதன்படி, டெங்கு பாதிப்புக்கு வழங்கப்படும் ஓசல்டாமிவிர் மாத்திரைகள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பில் உள்ளது. காய்ச்சலுக்கான பாராசிட்டமால் இருப்பில் உள்ளன.
மேலும், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் உப்பு சர்க்கரை கரைசல், கிருமி தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகளும் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு இருப்பில் உள்ளன. நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது” என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.