குஜராத்தில் 27 ஆண்டுகள் பாஜக ஆட்சி மட்டுமே இருந்து வருகிறது மேலும் இது பாஜகவின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்கிறது. இதையடுத்து 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிகழ்கிறது. எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது கடினம் என்று சொல்லப்பட்டாலும் புதிய வியூகங்களுடன் ஆம் ஆத்மி குஜராத்தில் களமிறங்கியுள்ளது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சூரத்தில் நேற்று நிருபர்களை சந்த்தித்தார். அப்போது பேசிய அவர் “நிச்சயம் ஆம் ஆத்மி கட்சி தான் 100% ஆட்சிக்கு வரும் என்று கூறினார், அதை சிறிய துண்டு சீட்டிலும் எழுதி செய்தியாளர்களிடம் காண்பித்தார். 27 ஆண்டு கால தவறான ஆட்சிக்குப்பின், குஜராத் இந்த மனிதர்களிடம் இருந்து (அதாவது பா.ஜ.க. ஆட்சி) விடுபடப்போகிறது.
மேலும் பேசிய அவர், ஆளும் பாஜகவை பார்த்து மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். அதை போக்க அனைவரும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 31-ந் தேதிக்குள் குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் அறிவிக்கையை நாங்கள் வெளியிடுவோம், இதை நாங்கள் ஏற்கனவே பஞ்சாப்பில் செய்து காட்டியுள்ளோம், ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதற்கு அரசு ஊழியர்கள் ஆதரவு முக்கியம். எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு போடுங்கள் என்று கூறினார்.
மேலும் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 27 ஆண்டுகளில் குஜராத்தில் பாஜக இந்தளவுக்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. நீங்கள் தெருவில் இறங்கி மக்களிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என கேட்டால், அவர்கள் ஆம் ஆத்மி அல்லது பா.ஜ.க.வுக்கு என்று சொல்வார்கள். பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவதாக சொல்கிறவர்கள் 5 நிமிடங்களில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவோம் என்று சொல்வார்கள். நாங்கள் பல மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். ஆனால் குஜராத்தில்தான் முதல்முறையாக மக்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என கூறுவதற்கு தயங்குகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களை எங்கும் காண முடியவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை” என அவர் கூறினார்.