ஏனாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா, கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த மாதம் கோதாவரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ஏனாம் பிராந்தியம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால், இந்த பகுதி மக்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்து அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏனாமில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 11 ஆயிரத்து 651 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள 4 ஆயிரத்து 165 குடும்பங்களுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், அனைத்து குடும்பங்களுக்கும் 25 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் மழை வெள்ளம் ஏனாமை தாக்காமல் இருக்க சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு உதவும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.