இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம் கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. அத்துடன் அரசின் பலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். இத்தகைய முக்கியத்துவம் கொண்ட ஆதார் கார்டு இல்லையென்றால், பல வேலைகளை செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படும்.
அதேபோல், ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் பிழை அல்லது வேறு ஆவணங்களில் இருந்து மாறுபட்டோ இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக இந்த ஆதார் அட்டையில், ஒரு நபரின் பெயர், வயது, பாலினம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோல், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டுமென இந்திய தனித்துவ ஆணையம் கூறியுள்ளது.
அந்த வகையில், ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இலவச அப்டேட் செய்ய வரும் ஜூன் 14ஆம் தேதியே கடைசி என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு அப்டேட் செய்ய விரும்பினால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, ஜூன் 14-க்குள் இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம்.