fbpx

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு… திமுக நிர்வாகிக்கு தொடர்பு…! அண்ணாமலை குற்றச்சாட்டு…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர். திமுக தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் இந்த பாம்பு கார்த்திக், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதனைத் தட்டிக் கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும், மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தப் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தைக் காட்டுகிறது. ஆளுங்கட்சி என்பதால், காவல்துறையினரோ, தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

பிரதமர் மோடி அவர்கள், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும்போது, திமுகவினர் ரேஷன் அரிசியைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்த்தரமானது. ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும். உடனடியாக, இந்த பாம்பு கார்த்திக் என்ற நபர் உள்ளிட்ட ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை ஊக்குவிக்கும் விதமாகச் செயல்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பின்மையை உருவாக்கியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட திமுகவுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Alert: தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை அதிகரிக்கும்...!

Thu Apr 25 , 2024
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும். வருகிற 28ம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு […]

You May Like