3-ம் கட்ட வாக்குப்பதிவிற்காக வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அசாம் மாநிலத்தில் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2, கோவா 2, குஜராத் 25,கர்நாடகா 14, மத்திய பிரதேசம் 9, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 10,மேற்கு வங்கம் 4 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் அவர்கள் தம் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது.
இதற்கு ஏதுவாக தேர்தல் நாட்களில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
தொழிலாளர் இணை ஆணையர், மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் தே.விமலநாதனை 944539880, 044-24335107 ஆகிய எண்களிலும், உதவி ஆணையர் சென்னை முதல் வட்டம் எம். வெங்கடாச்சலபதியை 7010275131, 044-24330354 ஆகிய எண்ணில் புகார் அளிக்கலாம்.