பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘பிங்க் ஆட்டோக்களை’ தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக சென்னை மாநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 250 பேருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓட்டுநர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திட்டத்துக்கேற்ப மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, இது தொடர்பாக கருத்து கேட்பதற்காக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பில்; சமூகநலத் துறையின் பிங்க் ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களே உரிமையாளராகவும் ஓட்டுநராகவும் இருக்கும் ஆட்டோவே பிங்க் ஆட்டோ எனப்படும். இந்த ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவுக்கு முழுமையாக பிங்க் நிறம் பூசப்பட வேண்டும்.
அவசர காலங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ், விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆட்டோவுக்கான உரிமத்தை 5 ஆண்டுகள் வரை பெயர் மாற்றம் செய்ய இயலாது. இந்த வரைவு திருத்தங்கள் மீது 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.