மக்கள் இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ள படம் ‘லியோ’ . இதில் விஜய் தொடர்பான காட்சிகள் நேற்று முடிவடைந்த நிலையில், படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளது.
இதனிடையே விஜய் தனது 68வது படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு புறம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த தகவல்களும் மிகத் தீவிரமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது அவரது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், ‘காமராஜர், அம்பேத்கர், பெரியாரை பற்றி பேசினார். ஒவ்வொரு மாணவ-மாணவியரும் பெற்றோர்களிடம் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்’ என கூறுமாறு தெரிவித்தார்.
அதேசமயம் அன்னதானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு என அரசியல் நகர்வுகளுக்கான அடியை விஜய் கவனமாக எடுத்து வைத்து வருகிறார். இப்படியான நிலையில், நேற்று லியோ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், உடனடியாக மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் இன்று சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தின் இன்று முதல் 3 நாட்களுக்கு விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஆலோசனைக்கு பனையூர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஜய்யின் புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் அவரின் தோற்றம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் செம ஸ்மார்ட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.