அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் போனில் யாருடனோ ‘சார்’ என்று பேசினார் என்று பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் தெரிவித்திருந்தார். அப்போதில் இருந்து ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, சிறப்பு விசாரணைக் குழுவிலும் மாணவி ஞானசேகரன் சாரிடம் பேசியதாக மீண்டும் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது சட்டையில் ‘யார் அந்த சார்?’ என்று ஸ்டிக்கருடன் வந்திருந்தனர். மேலும், சட்டசபைக்குள் ‘யார் அந்த சார்?’ என்று முழுக்கமிட்டதால் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், “கொடநாடு சிசிடிவியை ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாருங்கிறதையும் கேளுங்கப்பா” என்று பதிவிட்டுள்ளார். கொடநாடு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயமே. இன்று, அவர் சட்டசபையில் ‘யார் அந்த சார்?’ என்ற முழக்கமிட்ட நிலையில், இப்போது மருது அழகுராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.