12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அந்த வகையில், தேர்வு முடிவுகள் வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று, தங்களுக்கான மதிப்பெண்களை சரிபார்த்தபோது, அதில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களை காட்டிலும் குறைவான மதிப்பெண்களை கணக்கிட்டு ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது. தேர்வில் குறைவாக மதிப்பெண்களை வழங்கியுள்ளதை மாணவர்கள் கண்டறிந்து சமூகவலைதளங்களில் தங்களது நிலைமையை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தலில் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என 80 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்டவை கட் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.